செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

சமூக வலைத்தளத்தில் உங்கள் நிறுவனத்தை பரப்ப தயாரா?

நீங்கள் உங்கள் நிறுவனத்தை சமூக வலைத்தளம் மூலம் பரப்புவதற்கு முன்னர் செய்யவேண்டிய சில சுயபரிசோதனைகள் உள்ளன. ஏனெனில், இவற்றை நீங்கள் கவனிக்க தவறும்போது, உங்கள் பரப்புரை உங்களுக்கே வினையாக மாற வாய்ப்புகள் உள்ளன. எனவே கிழ்கண்ட சோதனைகளை நேர்மையாக உறுதி செய்த பின்னர், அல்லது அதற்கு தேவையான மாறுதல்களை செய்த பின்னர், உங்கள் நிறுவனம் சமூக வலைத்தளத்தில் பிரவேசிக்கலாம்.
Is_your_business_ready_for_Social_media_promotions


  1. நம்பகத்தன்மை: உங்கள் நிறுவனம் சொற்பமான வாடிக்கையாளர்களையே கொண்டிருந்தாலும் அவர்களுக்கு நீங்கள் நம்பகமானவராக இருக்க வேண்டும். இல்லையேல் நீங்கள் நீங்கள் சமூக வலைதளத்தில் உங்கள் விளம்பரங்களுக்கு அவர்கள் எதிர்மறையான கருத்துகளை தெரிவிக்க கூடும். சமூகத்தளவாசிகள் நிறுவனகளின் கருத்துகளை விட சக பயனர்களின் கருத்துகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிப்பர். சிறுதொழிலில் நம்பகத்தன்மை என்பது வாடிக்கையாளர்களின் கருத்துகளை கேட்பது, வாடிக்கையாளர்களின் தொலைபேசி அழைப்புகளை தவறவிடாமல் ஏற்பது, உங்கள் கட்டணங்களை வெளிப்படையாகவும் தெளிவாகவும் அறிவிப்பது போன்றவற்றை கருதலாம்.

  2. வாடிக்கையாளர் சேவை: உங்கள் நிறுவனம் வாடிக்கையாளர் சேவையை மையமாக கொண்டு செயல்பட வேண்டும். என்னதான் சிறப்பான சேவை அல்லது பொருளை வழங்கினாலும், அதை வாடிக்கையாளரின் தேவையை உணர்ந்து கொடுக்காவிடின், உங்களுக்கு பெரிய வரவேற்பு ஏதும் கிட்டாது. வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பை மிஞ்சிய சேவையே, அவரை சமூக வலைத்தளத்தில் உங்களை பற்றிய நேர்மறை கருத்துகளை பதிவிட தூண்டும்.

  3. புகார் தீர்வு அமைப்பு: உங்கள் வாடிக்கையாளர் புகார்களை உடனுக்குடன் தீர்க்கிறீர்களா? குறுகிய காலத்தில் சிறந்த தீர்வை அளிக்கிறீர்களா? புகாரை தீர்க்க முடியாத பட்சத்தில் மாற்று தீர்வு அளிக்கிறீர்களா அல்லது வாடிக்கையாளர் மனம் கோணாதவாறு பதில் அளிக்கிறீர்களா? இவற்றிற்கெல்லாம் உங்கள் பதில் ஆம் என்றால் உங்கள் நிறுவனம் சமூகத்தள சந்தைப்படுத்தலுக்கு தயார். இல்லையெனில் வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களை சமூகத்தளங்கள் மூலம் வெளிப்படுத்தக்கூடும். உஷார்!

  4. தெளிவான குறிக்கோள்: உங்கள் நிறுவனத்தில் குறிக்கோளை தெளிவாக வரையறுக்க வேண்டும். குறிக்கோள் என்பது நீங்கள் அதிக வருவாய் ஈட்டுவது மட்டுமல்ல. அது உங்கள் நிறுவனம் ஒரு தனி மனிதனுக்கோ அல்லது சமூகத்துக்கோ எவ்வாறு உதவுகிறது என்பதாகும். உங்கள் குறிக்கோள் நேர்மையாக இருக்கும் பட்சத்தில் சமூகத்தளங்களில் நீங்கள் அதிகம் விரும்பப் படுவீர்கள். உங்க சமூகத்தள பதிவுகளும் உங்கள் குறிக்கோளை ஒட்டியே இருத்தல் அவசியம்.

  5. உள்ளடக்க திட்டம்: உங்க சமூகத்தள பதிவுகளுக்கான உள்ளடக்கம் என்னவென்ற திட்டம் இருக்க வேண்டும். பொதுவாக எல்லா நிறுவனங்களுமே வாடிக்கையாளர் பாராட்டுரைகளை (Testimonials) பதிவிடலாம். மற்றும் உங்கள் நிறுவனத்திற்கேற்ப புது வரவுகள், வாடிக்கையாளர் குறிப்புகள், துறை சார்ந்த தகவல்கள், நிறுவனத்தின் நிகழ்வுகள், உங்கள் எதிர்கால திட்டங்கள் போன்றவை பதிவிடத்தகுந்தவை. மேலும் உங்கள் பதிவுகள் ஒரே சீரான கால இடைவெளியில் பதிவிடவேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

  6. நேர மேலாண்மை: சமூகத்தளங்களில் உங்கள் கருத்துகளை பகிரும் கால இடைவெளியை தீர்மானிக்க வேண்டும். அவ்வாறு தீர்மானிக்கப்பட்ட இடைவெளியில் ஒரே சீராக கருத்துக்களை பகிர்ந்து வரவேண்டும். உங்கள் வாடிக்கையாளர்களையும் நிறுவனத்தையும் அதன் குறிக்கோள்களையும் நன்கு உணர்ந்தவர்களால் மட்டுமே சிறப்பான பதிவிட முடியும். அதற்க்கு போதுமான ஓய்வு நேரம் உங்களுக்கு இருக்கிறதா? 
இந்த அணைத்து பரிசோதனைகளிலும் உங்கள் நிறுவனம் தேறிவிட்டதா ? வாழ்த்துக்கள். இப்போது உங்கள் நிறுவனம் சமுகத்தளத்தில் நுழைய தயார்.

என்னை தொடர்பு கொள்ள - Contact me

நீங்கள் அடுத்து தெரிந்து கொள்ள வேண்டியது,Facebook-ஐ பயன்படுத்தி உங்கள் வாடிக்கையாளர்களை சென்றடைவது எப்படி?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக